மாத்திரைகள் மூலமான கருக்கலைப்பு என்பது அறுவைசிகிச்சை மூலமான கருக்கலைப்புக்கு ஒரு மாற்றாகும், இதில் கர்ப்பத்தைக் கலைக்க மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். மாத்திரைகள் மூலமான கருக்கலைப்பை உங்கள் வீட்டிலேயே செய்துகொள்ளலாம் மற்றும் நீங்கள் ஒன்பது வாரங்களுக்குக் குறைவாக கர்ப்பம் தரித்து இருந்தால், இது கிடைக்கும்.
இதில் என்ன நடக்கும்?
மாத்திரைகள் மூலமான கருக்கலைப்புக்கு பொதுவாக இரண்டு சந்திப்பு ஏற்பாடுகள் இருக்கும். முதல் சந்திப்பில் உங்களுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும் மற்றும் மாத்திரைகளை எப்போது, எப்படி எடுக்க வேண்டும் என்றும் கூறப்படும். மைஃப்பிரிஸ்டோன் (mifepristone) மற்றும் மிஸோபுரோஸ்டோல் (misoprostol) ஆகியவையே பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளாகும்.
- படி 1: மைஃப்பிரிஸ்டோன் (mifepristone) என்பது ஒரு குவளை தண்ணீருடன் நீங்கள் சாதாரணமாக உட்கொள்ளும் ஒரு மாத்திரையாகும். முதல் மாத்திரையை உட்கொண்ட பிறகு கொஞ்சம் இரத்தப்போக்கு அல்லது உள்ளாடையில் இரத்த அடையாளங்கள் ஆகியவை ஏற்படலாம். மைஃப்பிரிஸ்டோனின் விளைவுகள் பொதுவாக இலேசானவை, அத்துடன் அவை நீண்ட காலம் நீடிப்பதில்லை. இந்த முதலாவது மாத்திரையை உட்கொண்ட பிறகு, பெரும்பாலான பெண்களால் வழக்கமான தினசரிப் பணிகளைச் செய்ய முடிகிறது
- படி 2: மிஸோபுரோஸ்டால் (misoprostol) என்பது வாயில் கரைத்து உட்கொள்ளப்படும் நான்கு மாத்திரைகளாகும், இது முதல் மாத்திரையை (மைஃப்பிரிஸ்டோன்) உட்கொண்ட 36-48 மணி நேரத்திற்குப் பிறகு எடுக்கப்படுகிறது. மிஸோபுரோஸ்டோல் கருப்பை தசைகளில் தசை இறுக்க வலி ஏற்படுத்துகிறது. இது கருப்பை வாயைச் சற்றுத் திறந்து, கருப்பையைக் காலி செய்து, கர்ப்பத்தை வெளியேற்றுகிறது. மாத்திரைகளை உட்கொண்ட பிறகு, 1-4 மணி நேரத்திற்குள் இரத்தப்போக்கு ஆரம்பிக்கவும் அடிவயிற்று வலி ஏற்படவும் வாய்ப்புள்ளது, எனவே நீங்கள் நாள் முழுவதும் வீட்டிலேயே தங்கியிருக்கும் ஒரு நாளில் மிஸோபுரோஸ்டால் மாத்திரையை உட்கொள்ளத் திட்டமிடுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
உங்கள் சுகாதார வழங்குநர், எவற்றையெல்லாம் நீங்கள் எதிர்பார்க்க வேண்டும் என்பது பற்றிக் கலந்துரையாடி, உங்களுக்கு ஒரு 24 மணி நேர பராமரிப்புத் தொலைபேசி எண்ணை வழங்குவார். நீங்கள் முதல் மாத்திரையை உட்கொண்ட 7 நாட்களுக்குப் பிறகு, நீங்கள் ஒரு பிற்தொடர்ச்சியான இரத்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும், மேலும் கருக்கலைப்பு செய்யப்பட்டுவிட்டதா என்பதைப் பரிசோதிக்க மாத்திரைகளை உட்கொண்ட 14-21 நாட்களுக்குப் பிறகு, ஒரு பிற்தொடர்ச்சியான சந்திப்பிற்கு வர வேண்டும்.
மாத்திரைகள் மூலமான கருக்கலைப்பின் பக்க விளைவுகள் என்ன?
பெரும்பாலானவர்களுக்கு மிதமானது முதல் கடுமையானது வரையிலான இரத்தப்போக்கு மற்றும் அடிவயிற்று வலி ஏற்படுகிறது. அடிவயிற்று வலியானது பொதுவாக சுமார் 24 மணி நேரம் நீடிக்கும், ஆனால் இரத்தப்போக்கானது இரண்டு வாரங்கள் அல்லது அதற்கும் மேலாகத் தொடரடக்கூடும். வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. வீட்டில் உங்களுக்கு ஒரு ஆதரவு நபர் இருப்பதும் அவசியமாகும்.
பிற பக்க விளைவுகளில் பின்வருபவை உள்ளடங்கலாம்:
- காய்ச்சல்
- குளிர் நடுக்கம்
- குமட்டல்
- வாந்தி
மாத்திரைகள் மூலமான கருக்கலைப்பு ஒன்றிற்கு நான் முன்பதிவு செய்வது எப்படி?
மாத்திரைகள் மூலமான கருக்கலைப்பு செயல்முறை பற்றி உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், அல்லது மாத்திரைகள் மூலமான கருக்கலைப்பை எங்கு செய்துகொள்ளலாம் என்பதைக் கண்டறிய, 1800 008 463 என்ற எண்ணில் ‘பிரகனன்சி சாய்சஸ்’ உதவி இணைப்பை அழைக்கவும்.